
இளமைப்பருவத்தின் இன்பமான தருணங்கள்
கனவில் வரும்போது களிப்பைத் தருகிறது
பாட்டியின் அன்பும் பரிவும் பாசமும்
பண்புடன் நினைத்துப் பரவசம் அடைகிறேன்
பள்ளி சென்று திரும்பிய நேரம்
பத்துப்பைசா தருவாள் பாட்டி
பல்லிடுக்கில் துரும்பியால் குத்தி
சுருக்குப் பைக்குள் காசு துளாவி
சுருங்கிக் காய்ந்த உள்ளங்கையால்
சுகமாய் முகத்தை தடவி விடுவாள்
சூழும் என் நண்பர்களை சுகம் வினவி
சூதானமாய் இருக்கச் சொல்லி
சுருக்கித் தனது கண்ணைக் காட்டுவாள்
சூட்டுக்காய் சில்லாங்குச்சி சீனிக்கல்
பம்பரம் கோலியின் பாதுகாப்பு அரணாய்
பத்திரமாய் வைத்து விளையாடத்தருவாள்
வாய்ப்பாட்டு வகுப்பில் வாத்தியார் அடிக்க
வா என்னோடென்று வகுப்பில் ஏறி
வாத்தியாரின் முன்னால் நின்ற பத்ரகாளி
வகுப்பில் பயிலும் பேரனை நோக்க
வராண்டா ஜன்னலில் முகம் காட்டும்
வாஞ்சை மிக்க வயோதிகத் தாய்
வெண்டை காயுடன் வெறுப்பு என்பதால்
மிச்சர் பொட்டலம் வாங்கித் தருவாள்
தேர்வுகளுக்கு சீக்கிரம் புறப்படும் நேரம்
தேடிக்கை நிறைய சில்லரை தந்து
பிச்சைக்காரர்களுக்கு கொடு என்பாள்
உடம்பைத் தொடாமல் ஓங்கியடிக்கும்
வித்தை கற்ற வெள்ளை மனக் கிளவி
கண்ணில் நீருடன் கண்டித்திடும்
கண்ணும்மா எனும் என் கண்ணான பாட்டி
குற்றாலச்சாரல் தூறலிடும்போது
குடையாய் தனது முக்காடை விரிப்பாள்
தடுமமும் காய்ச்சலும் பாடாய்ப் படுத்த
தட்டிக் காய்ச்சிய கஷாயமும் வெல்லமும்
தந்து சுகப்படுத்திய என் தங்கமான பாட்டி
கண் போலக் காத்த கருணையுள்ள பாட்டி
கரையானுக்கு உணவாய் கறைந்தே போனதென்ன
பரிவும் பாசமும் பண்பாய்ப்பெற்ற
பாட்டியின் நினவுகள் பாடாய்ப் படுத்தும்
படுக்கையில் கனவுகள் முழுவதும் பாட்டி வரவேண்டும்
பாட்டியின் மடியில் தலை சாய்க்க வேண்டும்
பரிவோடு அவள் என் தலை கோத வேண்டும்
பாசம்மிகக்கொண்டு அவள் வாசம் நுகர வேண்டும்
என்கனவில் ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக