வானவில்லின் வண்ணம் நிறை வாழ்வில்
வாய்வழிப் பிழைகள் வலிமிகு வார்த்தைகள்
வந்தோம் வாழ்ந்தோம் மறைவோம் இங்கே
வார்த்தைகள் நிற்கும் வலிகளையுணர்த்தும்
அம்பாய்த் துளைத்து அன்பருளம் சிதைக்கும்
அடி பட்ட பாம்புகளுக்கவகாசம் அளிக்கும்
நிம்மதி தொலைத்து நிழலையும் பகைக்கும்
நிலைகுலைந்த நம்மை நிற்கதியாக்கும்
வருமுன் காத்து பிணிதவிர்த்திடல் போல்
வழியுமுன் மொழியை உணர்ந்திடல் நன்று
கறந்தபின் பாலை மடுவுக்குள் சேர்க்கும்
கைங்கர்யம் இங்கே கடவுளுக்கும் இல்லை
மனிதரை மதித்திடும் மாண்பதன் பலனாய்
மண்ணில் யாவரும் உறவுற்று மகிழ்வர்
மலர்வதோ மரிப்பதோ தீதுடன் நன்றும்
மற்றொருவர் நம்மில் நிகழ்த்துவதில்லை
இனம் மற்றும் மதமென்னும் பேதங்கள் மறந்து
நான்மேல் நீ கீழேனும் ஆதிக்கம் துறந்து
சுற்றமனைத்தும் நற்றமிழ் உறவெனும்
சூத்திரம் மட்டுமே சூடிடும் வாகை
மனதில் தோன்றிய எண்ணங்கள் யாவும்
மனித நேயம் தளைத்திட நானும்
எனக்குத்தானே சொல்லிக்கொண்டேன்
என்னில் தவறு காணின் பொறுப்பீர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக