
போராடி நான் பெற்ற விடுப்பைக் கொண்டாட
ஊர் வந்து சேர்ந்தேன் உள்ளமெலாம் மகிழ்ந்தேன்
உற்றாரும் பெற்றாரும் ஊராரும் என்னருகில்
எனக்கென்று தனியாக யாருக்கும் தெரியாமல்
மனக்குறைகள் இறக்கிவைக்கும் சுமைதாங்கிக் கல் போல
கிழட்டு மரம் ஒன்றுண்டு கிணத்தங்கரை யருகே
வாட்டத்தோடு நீற்க்கும் எனை வாவென்று அழைத்தது அது .
வாஞ்சையோடு நிற்க்கும் இந்த வாகை மரத்தடியில்
வாழ்க்கையில் நான் பட்ட வலிமிக்க காயங்களை
வஞ்சனை துரோகங்களை வறுமையின் தழும்புகளை
வாய் உரக்கச் சொல்லி கண்ணீர் விட்டேன் ஓர் காலம்
நண்பர்கள் சேர்ந்து ஒன்றாய் கூடிக்களித்ததுண்டு
நட்பு மட்டும் மிஞ்சி விட நண்பர்கள் போனதெங்கே
சொல்லாத காதல் சுவற்றில் காய்ந்த மழைத்துளி போல்
பொல்லாத வறுமையால் பிழைக்கச் சென்றேன் அக்கறைக்கு
காசுக்கு ஆசைப்பட்டு கடனெல்லாம் அடைக்க வேண்டி
கடலுக்கு அப்பாலும் கை கட்டி சேவை செய்தேன்
காலங்கள் உருண்டோட கைப்பட்ட காசு எல்லாம்
காரியங்கள் பல செய்ய கை கொடுத்து நின்றதுவே
ஐந்து ருபாய் காசு வாப்பாவின் சட்டைப் பையில்
மாயமாய் போனதற்க்கு அடிபட்டு மிதிபட்டேன்
தந்தையின் கண்ணில் கண்ட கண்ணீரின் வடுக்கள்
பிந்தி ஓர் நாளில் என்னை நிரபராதி என்றே சொன்னார்
சின்னஞ்ச்சிறு வயதில் நானும் கண்ணுற்ற எந்தன் தந்தை
இன்னமும் எங்கள் வீட்டில் வசிக்கின்றார் எங்களோடு
கதி இனி பிள்ளை என்றே கண்களை இடுக்கிப் பார்ப்பார்
அதிகாரம் விட்டுவிட்டார் அலட்டலும் மாறிப் போச்சு
எனக்கொரு மகனும் உண்டு எல்லாமும் அவனுக்குண்டு
தனக்கொரு தேவையென்றால் தாயிடம் பேசுகின்றான்
தந்தையின் பணியைச் செய்ய நானில்லை அவனருகில்
கதி இனி அவன்தான் என்றே எதிர்பார்த்து வாழுகின்றேன்
வாகை மரத்தூரில் நின்று வாசத்தை முகர்ந்து பார்த்தேன்
வாஞ்சையாய் கைகள் கொண்டு வருடி முகம் தன்னில் தேய்த்தேன்
இன்னும் சில நாட்களிலே உனை விட்டுப் பிரிந்து போவேன்
என்னை நீ மறந்திடாமல் என் வரவுக்காய் காத்திரு ............
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக