
வாசம் தரும் வண்ண மலர்கள் எல்லாம்
வாடி வதங்கிவிடும் வண்ணம் இழந்துவிடும்
வான்முகில் கார் நிறம் வானவில்லின் வண்ணம்
வருகின்ற மழை நின்றால் தானாய் மாறிவிடும்
கூடிக் களித்து நிற்கும் குதூகலம் எல்லாமே
குறுகிய காலம்தான் கூட வரும்
மாட மாளிகை மனங்கவர் பொன்பொருள்
மானுட வாழ்வுதனில் நிலையிலிகள்
பாடும் புள்ளினத்தின் புலர் காலைப் புதுவிடியல்
பொழுதுடன் புறப்பட்டுப் பின்னடையும்
வாசமும் வண்ணமும் மகிழ்ச்சியுடன் செல்வமும்
வந்த பின் விடைபெறும் நீர்க்குமிழ்கள்
ஆசையுடன் நீயெனை நேசம் கொண்டதும்
அணைந்து என்னுடன் அகமகிழ்வுற்றதும்
மாறுமோ என்மன வானில் மறையுமோ
மைவிழிப் பெண்ணே திறந்து சொல்லுன் மனதை
நேசம் நிறை நிந்தன் நெஞ்சத்துள்ளே
நீங்காமல் நிலைத்தவன் நான் அல்லவா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக