உள்ளே நுழைந்தவுடன் வரவேற்ற
அரையடியகல மிதியுடன்
மரத்தாலான ஏணி
அதில் மிதித்த
பாத தடங்களின்
வளுவளுப்போடு
கைப்பிடியுடைய தேக்கு
நாற்காலி இருப்புப் பலகை
பளபளப்புடன்
இரண்டு மெல்லிய வெந்தேக்குப்
பலகைகள் வேய்ந்த
கீறிய இடைவெளிகளுடன்
சட்டம் கட்டிய
மரவணை க் கட்டில்
அப்பாவின் சாந்தி முகூர்த்தம்
உள்ளடக்கம் அனைத்து
உறவுகளையும் சுமந்த
ராசியான கட்டில்...
வெத்திலைச் செல்லம்
அது என்ன உலோகம்
தாத்தாவின் விரல் மற்றும்
மடி தழுவி வாழ்ந்த
அதே மினுக்கத்துடன்
பாய்கள் தலையணைகள்
ஜமக்காளம் தட்டை மற்றும்
உருளி உள்ளிட்ட பாத்திரங்கள்
ஆட்டுரல் கல் தொட்டி கடந்து
உரலருகே நின்ற போது
நெஞ்சை அடைத்த
துக்கம் தொண்டைக்கு வர
அதன் வளவளப்பான
வடிவு வரைந்த விளிம்பில்
கூர்ந்து நோக்கினேன் தேடினேன்
காய்ந்த ரத்தக்கரையை
மடமைக் காலத்தில்
அப்பா வெறியுடன் தள்ளியதால்
தட்டுத் தடுமாறி அம்மா
தன் நெற்றியால் மோதிய
ரத்த அடையாளம்
தென்படவேயில்லை
ஆதுரத்துடன் தடவினேன்
அந்த உரலை அதே சூடு
அதே மின்னுட்டம்
என் தாயின் மடிக்கணகணப்பு
நீதிமன்ற கண்காணிப்பில்
பாகப் பிரிவினையில்
பங்கிடமுடியாத
யாருக்கும் பயனற்ற
எங்களின் அந்தப்
பழைய வீட்டில் நான்
ம்ஹூம்
அத்தனையும் இந்தப்
பிரபஞ்சத்தில் ...
அஃறிணைகளின்
நிலைப்புகளாகவும்
அன்புறவுகளின்
நினைவுகளாகவும் மட்டுமே...
மனதில் பட்டதை ,இருப்பதை ,அதை உங்கள் பாணியில் சொல்லும் போது நாம் மறந்த அந்த பொருளின் மீது ஒரு வித ஈர்ப்பு வருகிறது உண்மை .
பதிலளிநீக்குமனதுக்குள் மறைந்திருக்கும் பொருள்களை
கவிதையாய் சொல்லிய நிலை ,மிகவும் அருமை.