எனக்கென்று ஒரு கூடு
அது தினமும் நான் இளைப்பாற
எனக்கென்று தனியறை
என்னை ஒதுக்கிக் கொள்ள...
எனக்கென்று உடை
எனது உடலம் மூடவும்
அலங்கரிக்கவுமெனில்...
எனக்கென சில வஸ்துகள்
அவற்றில் சில
என்னுடனே உயிரோடும்
சில உயிரற்றும் எனில்...
இன்றும் இவை எனக்கென
பொய்யாய் போலியாய்....
என் கவலைகள் உள்ளிட்ட
களிப்புகளும்
கல்பின் காயங்களும்
அதன் களிம்புகளும்
என் உடைமைகளாய்
ஒரு துருவேறிய
ரெங்குப் பெட்டியாய் வாய் திறந்து
ஒரு மூலையில்முடங்கிய
என் மனசுக்குள்
துடைக்கமுடியா
துன்பியல் அனுபவங்களை
அள்ளித் திணித்து
எனக்கென ஒரு ஆகாயமின்றி
பெய்யாத மழையாய்
என் அழுகை நித்தமும்
உயிர்க்கூட்டில் மாத்திரம்
ஒருவருக்கும் தெரியாமல்
நான் அழ ..
எனக்கென்று எதுவும் என்னை
நிரந்தரமாய் மகிழ்விக்க
இங்கில்லாத போது
என்கூடும் என் உடமைகளும்
என் தேடிப் பெற்ற செல்வமனைத்தும்
சூனியம் தான்
அதான் கணிதமும் கைசேதம் தான் ....
அதன்வழி
என் காயமும் கவலைகளும்
நோயுற்ற உடலமும்
நோன்புற்று நான் கண்ட மகிழ்ச்சியும்
மட்டுமே வாழ்வின் சூத்திரம் ...
எனக்கே
எனக்கென விதிக்கப்பட்ட
அந்த விடைபெறும் நாளின்
சடலம் மூடிய வெள்ளாடையும்
கணப்பு சூட்டுடன் கருவறை போல
வெட்டி முடிக்கப்பட்ட வெறும்
மண் புதைகுழி
எனக்கென....இவை மட்டுமே...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக