
இல்லற வாழ்வுதனில் இனிய துணை சேர்ந்ததனால்
நல்லறமானதுவே நான் கொண்ட நனிவாழ்க்கை
உற்றதும் உறவதும் உன்வரவால் உவப்பாக
உத்தமியே உயிரே வாழி
பிள்ளைகள் பிறந்தனரே பிணிமறந்து வளர்ந்தனரே
எல்லைகள் ஏதுமின்றி இன்பவானில் பறந்தனரே
பேணிவளர்த்அவரை பெருமிதம் சேர்த்தவளே
பெண்ணே பெருவாழ்வு வாழி
நஞ்சிலா நெஞ்சுடைத்த அஞ்சிடா வஞ்சியே
கொஞ்சி குலாவிஎன்னை குளிர்வித்து எந்நாளும்
தாழை நறுமடல் போல் என்நெஞ்சம் தகதகக்க
தகைமை கொண்டவளே வாழி
சந்தனப் பேழையே உன்கந்தமே உறவாக
என் தனப்பெட்டகமே நின்உள்ளமை பொருளாக
மண்ணினில் நான்பெற்ற பிறவிக்குப் பயனான
கண்ணான கண்மணியே வாழி
மன்னன் மனமொடிந்தால் மதிகூறும் மந்திரியாய்
கன்னல் மொழிபேசி காதல் சிறைப்படுத்தி
இன்னல் களைந்திங்கே இன்பம் சேர்த்திடுவாய்
மின்னல்கொடியே மேதினியில் வாழி
இல்லம் செழித்திருக்க இருப்புணர்ந்து செலவிடுவாய்
இல்லாளென நீயிருக்க நான் களிப்பின் இல் லானேன்
சொல்லின் பெரும்பொருளே சொர்க்கத்தின் உயிருறவே
சொந்தம் முழுமையே வாழி
வேங்கையின் வடிவெடுத்து வன்பகை வேட்டையாடி
ஆங்கதன் ஆணிவேரை அற்றம் கண்டறுத்து
தாங்கிப் பிடித்திடுவாள் தாழ்ந்திடாதென் குடும்பம்
பாங்கியே என்பைங்கிளியே வாழி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக