பாதைகள் பயணத்தின் நடுவுகள்
பாதைகளை கொண்டே
பயணங்கள் அமையும்
ஆயினும்
அவை ஒரு போதும்
பயணிப்பதில்லை
நிச்சயமாய்
பாதைகளைக்கழித்து
பயணங்களுமில்லை
பாதைகள் தான்
பயணங்களின் இலக்குகள்
அவற்றின் நீளங்களும் தூரங்களும்
சூழ்ந்த மரங்களும் மாமலைகளும்
சுழித்தோடும் ஆறுகளும் அருவிகளும்
உடன் வருகையில்
அவற்றுக்கு மதிப்பை தருவன
பாதைகள்
பயணங்களின் வேற்றுமைகள்
ஊரோடும் நீரோடும்
நிலத்தோடும் வளியோடும்
நிரந்து நிலைத்தவை அவை .....
பாதைகள்
பயணங்களின் குடுவைகள்
அவற்றின் கழுத்தளவு வரை
ரண நிகழ்வுகளும்
ரத்தம் சிந்திய சிலிர்ப்புகளும்
மயங்கவைக்கும் மகிழ்வுகளும்
மலைக்க வைக்கும்
மரணங்களுமாய்
பாதைகள்
உருக்குலைந்த உடல்களின்
சிதறிய நிணங்களின்
சொல்லாமல் பிரிந்த உயிர்களின்
கடைசி நேர தலை சாய் மடிகள்
ஆங்கு
அவை மட்டுமே பிரிவோரின்
இறுதி நேர நெஞ்சிடிப்பை
உணர்பவைகள்....
மரித்தவர்களையும் அவர்களை
மடியேநதிக் காக்க வரும்
மனிதர்களையும் அவர்தம்
சிதைந்த கனவுகள்
சிதறிய உறவுகளையும்
கண்ணிமைக்காமல்
பார்த்து கலங்கி நிற்பவை....
பாதைகள்
நிறம் சூடி நிலை குலையாது
இரு கதவுகளை மட்டுமே
தம்முடன் வைத்துக் கொள்பவை
ஒன்றில் நீ தொடங்கையில்
மற்றொன்றில் நீ நிச்சயம்
விடை பெற்றே தீர வேண்டி...
பாதைகள்
நீ விடை பெறும் வரை
அவை உன்னிடமிருந்து
விடை பெறுவதில்லை....
நல்ல கருத்துடைக் கவிதை. வித்தியாசக் கோணம். வாழ்த்துகள்.
பதிலளிநீக்குவேதா. இலங்காதிலகம்.
வித்தியாசமான கரு
பதிலளிநீக்குஉங்கள் படிமத்திலிருந்து
சற்று மாறுப்பட்ட வரிகள்.
மனதை காதல் கொள்ளும்.