ஏற்றங்கள் தம்மோடு இறக்கத்தையும் சுமந்து
இல்லாமை இருளோடு இப்புவியும் தவிக்குதம்மா
தோற்றங்கள் புதிதான மாற்றங்கள் காட்டிடினும்
தோற்றுத்தான் நிற்கின்றோம் துன்பங்கள் தீரவில்லை
செல்வக் குடிகளிலோ சேய்களோடு சுகபோகம்
செங்கல் சுமக்கும் ஏழைக் (இ)கிருளோடு சகவாசம்
விதைப்பெட்டி நிறைய விஞ்ஞானம் அள்ளினோம்
விண்ணில் கால்பதித்து விதைத்தோம் விரவச்செய்தோம்
வீடெங்கும் காட்சிகளாய் பிரபஞ்சம் அடக்கிட்டோம்
வீதியெங்கும் சாட்சிகளாய் சகமனிதம் சாவுதய்யா...
மண்ணில் மானுடம் மலைமுகட்டின் உச்சிதொட்டோம்
மண்வீடும் இல்லாது மழலைகளை மடியவிட்டோம்
கட்டிலிலே கண்ணயர்ந்து ஒருகூட்டம் சுகிக்கையிலே
பட்டினிப் பாவங்களோ பார்முழுதும் அலையுதம்மா....
எழுச்சிகளோடு ஏலம்போகும் இவர்கள்தம் புவிவாழ்வு
இழிந்தும் இழந்தும் இன்னல்பட வாடுவதோ...
மும்மாரி பெய்திடினும் முப்போகம் ஈட்டிடினும்
மூழ்கிவிட்ட கப்பலைப்போல் இவர்உலகம் ஆனதென்ன
கட்டுமானக்கலையில் நாம் கடல்தாண்டி வென்றாலும்
கழிப்பறையில் குடியிருக்கும் கடினவாழ்வு தீர்வதெப்போ...
அவலந்தான் மாறாதா இந்தஅகிலந்தான் உணராதா
ஆறடி உடலத்தில் அறையடிதானே அடி(உ)யுதரம்
சாவடி அடிக்குதம்மா சக்கையாக்கி பிழியுதம்மா
சாக்கடை தான் போக்கிடமா சரீரத்தை சாய்ப்பதற்க்கு
சங்கடங்கள் தீராது நம் சத்தமொன்றும் ஒலிக்காது
சகோதரக் கண்மணியே சகித்து வாழப் பழகிவிடு...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக