எனக்கு அந்த விளக்குகளை
பிடிக்கவில்லை
எத்தனை பிரகாசம்....
இருட்டின் அழகை
குலைத்தது அதுதானே...
கருப்பின் கருவுக்குள்
காத்திட்ட ரகசியங்களைக்
கைநிறைய அள்ளிக்
கண்களுக்கு
காட்சியாக்கிய அந்த விளக்குகளை
வெறுக்கிறேன்.
இருள் என் ஆடையாய்
தொடமுடியாத் தனிமையாய்
என் உயிரில் கலந்த ஒரு உணர்வாய்...
என் பகல்முழுக்க கண்பூத்துக்
காத்திருத்தலில் விளைந்த
எனக்கான தோழியாய்
பறவைகளின் விலங்குகளின்
போர்த்தித் துயில் காக்கும்
போர்வையாய்
கிசுகிசுப்புகளின் மொட்டுக்களை
மலரவிடாது மனசோடு
மனசாய் மாறிப்போன
அவற்றின் புறத்தை
வெள்ளையாக்க வந்த
விளக்குகளை
விட்டு நானும் விலகுகிறேன்...
நான் இருளோடு
அதன்இரவோடு
அவற்றின்
கைமூடிய ரகசியங்களோடு
ரகசியங்களில்
காதல் மிகக் கொள்பவன்..
உனது வீச்சை விவரிக்க
விழாக்காலங்களில்
இரவின் இருட்டாடையை
விளக்குக் கத்தியால்
கிழித்துச் சிதைப்பதும்
சரவிளக்குகலால் சட்டையிடுவதும்
உன் ஒளியாட்சியின்
ஆளுமையை என்னிடம் காட்டினாலும்
நான் ஒளிந்து நின்று
கருப்போடு கருப்பை காதலிக்கிறேன்
எனக்கான இரவுகளை
என்னோடு உயிர்த்து
என்னோடு மரணிக்கவும்
ஆசைப் படுகிறேன்...
நான் என் இருட்டை
நேசிப்பதால் என்னவனே!
நீ என்னை அலங்கரிக்கச் சொல்கையில்
என் இயல்பை
என் உண்மையை
என்னை
உனக்காக பூச்சுக்களாலும்
பொய்ச் சிரிப்புகளாலும்
அந்த விளக்குகளால் தனையிழந்த இருளைப் போல்
என்னையும்
உன்னிலிருந்து நான் இழந்து போனேன்
உண்மையில் நான் இறந்து போனேன்......